27.10.15

சினிமா.

---சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன,
1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா
2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா
3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா
4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா
5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா
6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா
7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா
8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா
9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா
10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா
11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா
12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா
13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா
14) "அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே "என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா
15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா
ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை
மொத்தத்தில் சினிமா என்பது ஓழுக்கச்சீர்கேட்டின் "கையேடு"
விபச்சாரத்தின் "நுழைவாயில்"
சமூக சீர் குலைவிற்கான "ஆயுதம்"
சினிமாவை குறை சொல்லும் முன் உங்கள் வீட்டில் டிவி சினிமாவை தூக்கி எறியுங்கள். அஸ்திவாரம் பலப்படும், அடுத்த தலைமுறை உருப்படும்.
------------------------------------------------------------------------------------------



நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி: 
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்:
நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
நான் வாழை அல்ல...!
சவுக்கு மரம்....
Think positive always
-
-
இணையம்.

----------------------------------------------------------------------------------------------------------------------




ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நடிகை மனோரமா( வயது 78) இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற நடிகை மனோரமா, 1,500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் விழாவில் பங்கேற்கும் அளவிற்கு உடல் நலம் பெற்றிருந்தார். மீண்டும் சினிமாக்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித் தார். இந்நிலையில் அவர் மறைந்தது கலைத்துறையினரையும், ரசிகர்களையும் வருத்தப் பட வைத்திருக்கிறது.
மனோரமா! இவரது இயற்பெயர் கோபிசாந்தா. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 26.5.1943 ல் பிறந்தார். இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமாவின் குடும்பத்தினர், அவர் சிறு வயதாக இருக்கும்போதே காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். நாடகங்களில் நடித்து அதன் மூலமாக திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வந்தார்.
ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் மனோரமா. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் மனோரமா. 2002ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 1988ம் ஆண்டு, புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை என்று தேசிய திரைப்பட விருது பெற்றார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பிலிம்பேரின் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
நடிகை மனோரமா வாழ்கை வரலாறு:.......................
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்கள்.
பிறப்பு: மே 26, 1943
பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
நாடகத் துறையில் ஒரு பயணம்
ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில் எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரது பயணம்
அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.
கலையுலக வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.
தனிப்பட்ட வாழ்க்கை
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.
நடித்த சில முக்கியபடங்கள்:
5 தலைமுறை நடிகை
*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*சின்னக்கவுன்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ரசிகன்
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்.

-----------------------------------------------------------------------------------------

நேற்று நடிகர் சங்க தேர்தலால் தெரிந்து கொண்ட தகவல்களில் முக்கியமானது:
தமிழ்நாட்டில் மொத்தம் 3000 நடிகர்கள் இருக்கிறார்கள் என.
தமிழ்நாட்டின் ஜனதொகை 6 கோடி என வைத்துக்கொண்டால் இந்த 3000 பேரில் இருந்து யாரோ ஒருவர் தான் கடந்த 40 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஊடகங்களும், தமிழ்நாட்டின் பத்திரிக்கைகளும், விளம்பர உலகமும் இந்த 3000 பேரை நம்பியே உள்ளன. அதிலும் இந்த 3000ல் பெரும்பாலானோர் நாடக, சின்னதிரை நடிகர்கள். உண்மையான அதிகார மையம் என்பது இதில் ஒரு 50 பேர் இருக்கலாம்.
ஆக மைனாரிட்டியிலும் மைனாரிட்டியான இந்த சிறு துறையே தமிழகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது.
இவர்களுடன் பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என சேர்த்தால் ஒரு 100 பேர் மொத்த தமிழகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் நாடே அழுகிறது, மக்கள் வேலை வெட்டியை விட்டுவிட்டு இவர்கள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்காக வருத்தமோ, மகிழ்ச்சியோ அடைகிறார்கள். கட்சிகள், இயக்கங்கள் துவக்கபடுகின்றன. இவர்களை பற்றிய செய்திகளாலேயே ஊடகங்கள் 'சர்வைவ்' ஆகின்றன.
இந்த பிரபலங்களுக்கும் நமக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்ன?
இவர்கள் இவர்களை பற்றி மட்டுமே கவலைபடுவார்கள். அம்பானி எங்காவது எந்த நடிகனுக்காவது ரசிகர் மன்றம் ஆரம்பித்ததையோ, வம்சம் சீரியலை உட்கார்ந்து பார்த்ததையோ நம்மால் காண இயலுமா?
ஆனால் நாம் இவர்களை போல இல்லாது நம்மை பற்றி கவலைபடாது இந்த பிரபலங்களை பற்றிய செய்திகளை படித்தே வாழ்க்கையில் அதிக நேரங்களை வீணடிக்கிறோம்.
அவர்களை மாதிரி நாமும் நம்மை பற்றி சிந்திக்க கற்றுகொண்டால் அதுவே உருப்படுவதற்கான வழியாகும்.
அதை விட்டுட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு பைத்தியமாக ஆனதை நினைத்தால் தலையை குட்டிசுவத்தில் முட்டிக்கலாம் என தான் தோன்றுகிறது.
அவர்கள் தான் படத்திலேயே "போயி புள்ள குட்டிய படிக்க வைங்க"னு சொல்றாங்களே?
'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை' என படத்தில் பாடுகிறார்கள்.
அதை எல்லாம் கேட்கிறோமா நாம்?
நாளைக்கு சரத்குமார் தோத்தத்துக்காக யாரச்சும் தீக்குளிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
----------------------------------------------------------------------------------------



No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog