27.10.15

சமுதாய பிரச்சனைகள்.



சிந்திக்க சில விஷயங்கள்.
கும்பகோணத்தில் 83 பிஞ்சு உள்ளங்களை தீயின் கோர நாக்குக்கு பலி கொடுத்த பிறகுதான் ஓலைக்கூரைகள் எத்தனை ஆபத்தானவை என்ற விழிப்புணர்வு நமக்கும் அரசுக்கும் வருகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களது வீட்டிலேயே ஓலைக்கூரை அகற்றப்பட்டு ஓடுகள் பொறுத்தப்பட்டதும் கும்பகோணம் சோகத்துக்குப்பிறகுதான்.
என்ன காரணத்தோலோ விபரீதமாக ஏதாவது நடந்த பிறகே அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மெத்தனப்போக்கை அரசும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
ரங்கநாதன் தெருவை அங்குள்ள கடைக்காரர்கள் அத்துமீறி ஆக்ரமித்திருப்பதை நாம் அறிந்து கொள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிய வேண்டியுள்ளது.
அதில் சில தொழிலாளர்கள் உடல் கருக வேண்டியுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என்று ஏகப்பட்ட கவலைகள். ஆகவே இது போன்ற விஷயங்களுக்காக கொடி பிடிக்கவில்லையே என்று அவர்களைப் பார்த்து கோபப்படுவதில் அர்த்தமில்லை.
இந்த சூழ்நிலையில் “வருமுன் காப்போம்” என்ற அடிப்படையில் அரசு கவனம் செலுத்த வேண்டிய சில அதிரடி விஷயங்கள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
அரசின் கவனத்திற்கு
பிரச்னை 1.
”சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இரண்டைத்தவிர மற்ற கடைகளில் விற்கப்படும் தங்கம் கலப்படத் தங்கம்” என்று ஒரு பண்பலை அலைவரிசை ஒரு நாள் முழுவதும் உரக்கச் சொன்னது.
தங்கம் விற்கும் நகைக்கடைகளை அடிக்கடி சோதனை செய்து அவைகளைத் தரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் அரசு நிர்வாகத்தைத் தடுப்பது எது?
பிரச்னை 2
பள்ளிகள் தங்களது மாணவர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்து பேருந்து மற்றும் வேன்களில் மாணவர்கள் ஆட்டு மந்தைகள் போல் அடைக்கப் படுகின்றனர். ஒரு வேனுக்கு இவ்வளவு மாணவர்கள்தான் பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயமாக நடைமுறைக்கு கொண்டு வருவதில் என்ன பிரச்னை?
பிரச்னை 3
பெருவாரியான தனியார் தொலைக்காட்சிகளில் காலை அல்லது இரவு வேளைகளில் யாராவது ஒரு தாடி வைத்த அல்லது வைக்காத ஒருவர் “மருத்துவர்’ என்று தன்னை சொல்லிக்கொண்டு எந்த மருத்துவராலும் தீர்க்க முடியாத அனைத்து வியாதிகளையும் தான் தீர்த்து வைப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் எல்லோரும் உண்மையான மருத்துவர்கள்தானா? இவர்களது சிகிச்சையால் யாராவது குணமடைந்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசின் கடமையில்லையா?
பிரச்னை 4
தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில்அர்ச்சகர்கள் பலர் கடவுளின் பெயரால் நடத்தும் வழிப்பறிக் கொள்ளைகளுக்குப் பயந்து ஆலயங்களுக்கு செல்வதற்கே மக்கள் பயப்படுகின்றனர். இவர்களிடம் அயல் நாட்டுக்காரர்களும், சுற்றுலா பயணிகளும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டியது அரசின் அத்தியாவசிய பணியில்லையா?
பிரச்னை 5
“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்” என்பது போன்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படத்தேவையில்லை
என்கிற சலுகை அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
பெரும்பாலான அரசு பேருந்துகள் ‘நோ எண்ட்ரி” களில் சர்வ சதாரணமாக செல்வதையும் எந்த சிக்னலையும் மதிக்காமல் போவதையும் கண்ணெதிரே பார்த்த பிறகும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்குவது ஏன்?
அரசு பேருந்தை ஒட்டுபவரென்றால் அவர் எந்தத் தவறு செய்தாலும் அவருக்கு தண்டனை கிடையாதா?
இது போன்ற எண்ணற்ற விசயங்கள் இன்னும் இருக்கின்றன.இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அரசுகள் தூங்கிக்கொண்டுள்ளன.
நாம் தாலாட்டிக்கொண்டிருக்கிறோம்.
வாழ்க ஜனநாயகம்!
===============================================================



பொழுதுபோக்கு அவசியம் தான்...அதை விட முக்கியம் சாப்பிட உணவு......
அன்புள்ள நண்பர்களே......
சற்று முன் நான் இணையதளத்தில் பார்த்த செய்தி ஒன்று என் மனிதல் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. பாகுபலி இயக்குனர் ராஜமெளலி 1000 கோடி ரூபாய் செலவில் மகாபாரதம் திரைப்படம் எடுக்க போகிறராம்.பிரம்மாண்டம் பொழுதுபோக்கு,நல்ல திரைப்படம்,இந்திய சினிமாவை வேற நிலைக்கு எடுத்து செல்வது.
இதை எல்லாம் தாண்டி கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்.நம் நாட்டில் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.500 ரூபாய் வட்டி காசு கட்ட இயலாமல் 1000 கணக்கில் விவசாயிகள் தினமு‌ம் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..
அப்படி இருக்க இந்த 1000 கோடி ரூபாய் எங்கே இருந்து வந்தது.இது யாருடைய பணம்...1000 கோடி ரூபாய் செலவில் ஒரு திரைப்படம் தயாரிக்கபடுகிறது என்றால்.அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..அந்த படத்தை வாங்கி விற்கும் விநோயகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..அதை திரையில் ஓட வைக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்...
அடுத்து உங்கள் மனதில் என்ன கேள்வி எழும் என்றும் எனக்கு தெரியும் எல்லா திரைப்படங்களும் வெற்றி பெறுவது இல்லையே...உண்மைதான்,ஆனால் படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரோ,இயக்குநரோ,திரையரங்கு உரிமையாளரோ..அந்த படத்தில் நடித்த கதாநாயகனோ தற்கொலை செய்து கொண்டதாக நான் கேள்விப்பட்டது இல்லையே..
ஏன் என்றால் அவர்களை பொறு‌த்தவரை அது வெறும் ஒரு தொ‌ழி‌ல் ஒரு படம் தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம்....
ஆனால் ஒரு விவசாயி தன்னால் எப்பொழுது விவசாயம் பண்ண முடியவில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றானோ அன்றுடன் இந்த உலகில் வாழ தான் தகுதி இல்லாதவன் என்று தன்னை மாய்த்துக் கொள்கிறான்..ஏன் என்றால் விவசாயம் அவன் தொழில் அல்ல அது அவனுடைய உயிர்....தன்னால் ஒரு மனிதனின் உணவின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற உண்ணதமான உணர்வு...
ஆனால் நாம் என்ன செய்வோம் விவசாயி தன் வியர்வையை சிந்தி,அவன் கோமாதா ரத்தத்தை முறித்து தரும் பாலை நமக்காக எந்த விதத்திலும் பயன்படாத கதாநாயகனின் 60 அடி கட் அவுட் மேல் நின்று கீழே வீணாக ஊற்றுவோம்..
அடுத்ததாக உங்கள் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் திரைப்படத்துறையிலும் நிறைய பேரின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கு என்று..என்னுடைய கேள்வி இதுதான் சொகுசு கார்,சொகுசு பங்களா என்று வாழும் நடிகரின் சம்பளம் எவ்வளவு..அந்த திரைப்படத்திற்காக நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்க்கும் அடிமட்ட தொழிலாளியின் சம்பளம் எவ்வளவு...ஏன் இந்த இருவருக்கும் இடையே இவ்வளவு ஏற்ற தாழ்வு...
ஒருபக்கம் நம் பொழுதுபோக்கு காக பயண்படும் சினிமா எடுக்க கோடி கணக்கில் பணம்.மறுபக்கம் நாம் தினமும் உண்ணும் உணவை தயாரிக்கும் விவசாயி பணம் இல்லாமல் தற்கொலை...
நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.......
200 ரூபாய் செலவு செய்து சினிமா பார்க்கும் நாம் தான்...வெட்கமே இல்லாமல் காய்கறி கடைகாரனிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசுகின்றோம்...இதனால் பாதிக்க படுவது யாருடைய வாழ்வாதாரம்....
இந்த பதிவு சிலரை காயப்படுத்தி இருக்கலாம்...சிலரின் பார்வைக்கு தேவை இல்லாத பதிவாக இருக்கலாம்....
ஆனால் என்னை பொறு‌த்தவரை நான் தினமும் உண்ணும் உணவில் ஒரு விவசாயின் உழைப்பு இருக்கிறது..என்னால் அந்த மனிதனுக்கு 60 அடியில் கட் அவுட் வைக்க முடியாது...மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த பதிவினை பதிவிடுகிறேன்....
இது பலரின் பார்வைக்கு கொண்டு செல்வது உங்கள் கையில் தான் உள்ளது......

--------------------------------




மரண விலாஸ் ஓட்டல்கள்.
-----------------------------
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு
அரசு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். இரவு உணவகம் ஒன்றில் பேருந்தை நிறுத்தினார்கள்.
காலி பிளாஸ்டிக் பாட்டிலால் ஒருவன் பஸ்ஸை டமால் டமால்னு தட்றான்.குழந்தைகள் முதல் அனைவரும் தூக்கம் கலைந்து விடுகிறார்கள்.இவர்களுக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?.
திறந்தவெளி கழிப்பறை, அருகிலே கொசு மொய்க்கும் சமையல்கூடம், அழுக்கான சாம்பார் வாளி, கழுவப்படாத டம்ளர்கள், காது கிழியும் குத்துப் பாடல்… சாப்பிட உட்காரவே தயக்கமாக இருந்தது.
பரோட்டா, சப்பாத்தி, தோசை மூன்று மட்டுமே இருப்பதாகச் சொன்னார்கள். தோசைக்கு சட்னி, சாம்பார் கிடையாது. குருமா வாங்கிக்கொள்ள வேண்டும். அது 75 ரூபாய். தோசை 100 ரூபாய். ‘தோசைக்கு யார் குருமா வைத்து சாப்பிடுவார்கள்?’ என்றேன். ‘இஷ்டம் இருந்தா சாப்பிடுங்கள்’ என்றார்கள்.
ஓசியில் சாப்பிடுவதற்காக டிரைவர்,கண்டக்டர்கள் இங்குதான் பஸ்ஸை நிறுத்துவார்கள்.அவர்களுக்கு அங்கு கவனிப்பே தனி.
உணவு,வாட்டர் பாட்டில்,சிகரெட் பாக்கெட்,பீடா,பிஸ்கட் அனைத்தும் இலவசம்.
மதுவிருந்தும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பசிக்கு ஏதாவது பழம் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து வெளியே வந்தால், பழக்கடையில் ஒரு வாழைப்பழம் 15 ரூபாய். பெயர் தெரியாத ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 50 ரூபாய். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் 80 ரூபாய்.
ஹோட்டல் வாசலில் ஒரு கிராமத்துப் பெண் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். ‘ஒத்தை தோசை 100 ரூபாயா? பகல் கொள்ளையா இருக்கு. ஒரு கிலோ இட்லி அரிசி 25 ரூபாய். ஒரு கிலோ உளுந்து 61 ரூபாய். மாவு ஆட்டுற செலவு, எண்ணெய் எல்லாம் சேர்த்தாகூட ஒரு தோசை விலை 20 ரூபாய்க்கு மேல வராது. வியாபாரம் பண்ணுறவன் 30 ரூவான்னு வித்துட்டு போ. 100 ரூபாய்னு அநியாயம் பண்ணாதப்பா. இந்த துட்டு உடம்புல ஒட்டாது’ என்று சாபமிட்டார்.
அந்த அம்மாவின் கோபத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், ‘தோசை ஒரே புளிப்பு. ரப்பர் மாதிரி இருக்கு. கிழங்கு மாவு கலந்து இருக்காங்க’ என்றார். ‘ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே?’ என்றதும், ‘இது கட்சிக்காரங்க கடை’ என சுவரில் மாட்டப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். இதிலுமா கட்சி?
‘சாப்பாட்டு விஷயத்துலகூட கட்சி வெச்சிருக்கிறது தமிழர்கள்தான்’ என்று ஒரு சொற்பொழிவில் எம்.ஆர்.ராதா கேலி செய்வார். தோசை வரை கட்சி ஆக்ரமித்திருக்கிறது.
ஒரு நாளைக்கு நெடுஞ்சாலையில் ஆயிரமாயிரம் கார்கள் போய்வருகின்றன. எங்கும் முறையான கழிப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது. உணவகம் கிடையாது. முதலுதவி மருத்துவமனைகள் கிடையாது. ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் முறையாக நடக்கிறது. அடிப்படை வசதிகள் பற்றி யாரும் எந்தப் புகாரும் தெரிவிப்பது இல்லை… தெரிவித்தால் கண்டுகொள்வதும் இல்லை.
சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும் உடனடியாக வேக வேண்டும் என்பதற்காகவும் பாரசிடமால் மாத்திரைகளைக் கலக்குகிறார்கள் என்கிறார்கள். சாலையோர உணவகங்களில் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை மற்றும் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
இந்தக் கொடுமை போதாது என்று சமீப காலமாக நெடுஞ்சாலை எங்கும் கும்பகோணம் காபி கடைகள் பத்து அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. இந்தக் கடைகளுக்கும் கும்பகோணத்தின் ஃபில்டர் காபிக்கும் ஒரு ஸ்நானப்பிராப்தியும் கிடையாது. ஏமாற்றுவதற்கு ஒரு பெயர்தானே வேண்டும். எல்லா கடைகளிலும் சொல்லிவைத்தாற்போல செம்பு டபரா, டம்ளர் செட், அதில் பாயசத்தில் காபி தூளைப் போட்டுக் கலக்கியதுபோல ஒரு காபி. பாவம் மக்கள்… இந்தக் கண்றாவியைக் குடித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலை உணவுக் கொள்ளையைப் போல ஊர் அறிந்த மோசடி எதுவுமே இல்லை. ஸ்குவாட் அமைத்து எதை எதையோ அதிரடியாக சோதனை செய்கிறார்களே… அப்படி ஒரு பறக்கும் படை அமைத்து உணவகங்களை சோதனை செய்து தரமற்ற கடைகளை மூடலாம்.
சமீபத்தில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சாலையோர உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராமல் நுழைந்து, வரிசையில் நின்று தனக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். உணவுக்கு அவர் தந்த கட்டணம் வெறும் 21 யுவான். அந்தப் பணத்தில் பெரிய ஹோட்டலில் ஒரு பாட்டில் தண்ணீர்கூட வாங்க முடியாது. நாட்டின் ஜனாதிபதி உணவகத்துக்கு வந்தபோதும், கடையில் ஒரு பரபரப்பும் இல்லை. மக்கள் இயல்பாக அவரோடு இணைந்து சாப்பிட்டுப் போனார்கள்.
நமது அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை ஒருமுறை ஹைவே மோட்டலுக்குச் சென்று மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும்… அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.
சாலையோர மோட்டல்களை
'மரண விலாஸ்'
என்றுதான் அழைக்க வேண்டும் . 
அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே?

--------------------------------------------------------------------------------------


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - கண்ணையா.
வெளியூர் நண்பர் ஒருவர் இன்று கோவை அண்ணப்பூர்னா ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்பதால் ஒரு ஐந்து மணி சுமாருக்கு பக்கத்திலேயே எங்காவது பேசிக் கொண்டிருப்போம் என்று காந்தி பூங்கா சென்று காலாற நடந்தோம்.
ஆங்காங்கே, காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்பவர்கள், பொழுது போக்குபவர்கள் என்று பூங்கா உயிரோட்டமாக இருந்தது. உட்கார இடமில்லாமல் பலர் இடத்தை பிடித்திருந்தனர். நெருக்கமாக இருக்கும் மரங்களின் மேலே கணக்கற்ற வௌவால்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உட்காருவதற்காக போடப்பட்டிருந்த‌ க்ரானைட் மேஜைகளில் வௌவால்கள் மற்றும் காக்கைக‌ளின் எச்சங்கள் நிறைந்திருந்தன.
நாங்கள் பூங்காவை பெரிதாய் ஒரு வட்டம் அடித்து விட்டு திரும்புகையில், ஒரு பெரியவர் ஒரு க்ரானைட் மேஜையை துடைத்து கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது. ஒரு தகடை போல் ஒன்றை வைத்திருந்தார். நான் இவர் என்ன செய்கிறார் ? எனக் கேட்க, நண்பர் "உட்காருவதற்காக துடைக்கிறார் போலும்" என்றார். எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரை பார்த்தால் பூங்காவில் வேலை செய்பவர் போன்றும் இல்லை. என் கரபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் "ஐயா" என்று அழைத்ததும் திரும்பினார். என்ன செய்கிறீர்கள் ?என்று கேட்டதும். "இந்த பூங்காவிற்கு எத்தனையோ பேர் வருகிறார்கள், குடும்பத்தோடு வந்து உட்கார இடம் இல்லாமல் தவிக்கிறார்கள், அதனால், நான் இங்கு வரும்போதெல்லாம் இந்த சிறு வேலையை செய்கிறேன்" என்றார். மீண்டும் பேசிக் கொண்டே அந்த க்ராணைட் மேஜையில் உள்ள எச்சங்களில் கரைகளை சுத்தம் செய்தார்.
பூங்காவிற்கு வந்துள்ள அத்தனை மக்களுக்கு இல்லாத அந்த சமூக அக்கறை இந்த பெரியவருக்கு இருப்பதைக் கண்டு நான் திகைத்து போனேன். முழுவதுமாக துடைத்து முடித்துவிட்டு பெரியவர் நிறைய பேசினார். அவர் பெயர் "கண்ணையன்" என்றும் "கவுர" சமூகத்தை சேர்ந்தவர் என்றும், சொன்னார். அவரோடு பேச பேச அவரின் பல சமூக சேவைகள் தெரிய வந்தன.
வார்த்தைக்கு வார்த்தை "நாராயணா" என்கிறார். சிறு வயதில் அவர் வளையல் வியாபாரியாம். பிரிட்டீஷ் காலத்தில் திருச்சூரில் இருந்து வளையல் வாங்கி வந்து வியாபாரம் செய்வாராம். கோவையில் கவுரவ சமூகத்திற்காக, ஒவ்வொருவரிடமும் நாலணா வீதம் வசூல் செய்து கல்யான மண்டபம் கட்டியுள்ளாராம். வலையல் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாராம். இப்போது கடைசியாக‌ பண்ணிரெண்டு வருடம் தாராபுரம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் தன் குல தெய்வமான "கருப்பராயன் மற்றும் கண்ணிமார்" கோவிலில் தங்கி விட்டாராம். அங்கு இறைவனுக்கு தொண்டு செய்த போது கிடைத்த திருப்தி, தன் வாழ்வில் வேறு எதுவும் தரவில்லை என்றார். இப்போது கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து ஐந்து மாதம் ஆகியுள்ளதாம்.
இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டிருப்பாரோ ? அவருக்கு ஏதேனும் சிறு பன உதவி செய்யலாமா என்று நான் மனதில் யோசித்து கொண்டிருந்தேன். அவர் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்று, "உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா" என்று கேட்டேன் ? "எனக்கு ஒரு குறையும் இல்லை" என்றார். வளையல் வியாபாரத்தில் பல சொத்துக்களை வாங்கி போட்டிருப்பதை யதார்தமாய் சொன்னார். வணிக வளாகங்கள் கூட நகரின் மைய பகுதியில் உள்ளதாம். எல்லாவற்றையும் மகனிடம் ஓப்படைத்து விட்டு, நிம்மதியாய் உள்ளாராம்.
எனக்கு ஒரு சத்தியமான துறவியை கண்ட திருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால் இன்னும் இந்த பூமி நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். இறைவன் இப்படி பட்டவர்களின் உருவத்தில் தான் வந்துக் கொண்டிருக்கின்றான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த பலர் துறவரம் நோக்கி செல்வதை பார்க்கலாம். அது நிலைக்காது. வாழ்க்கையை முழுமையாய் வென்றுவிட்டு துறவரம் செல்பவனே நிலைத்திருப்பான்.
உங்கள் வயதென்ன என்று கேட்கையில் "பயப்படாதீங்க தொன்னூற்றி ஐந்து" என்று சொல்லி, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து, பல‌ கதைகளை சொன்னார். உட்காராமல் நின்றுக் கொண்டே பேசினார். விடை பெறுகிறேன் என்றதும், ஒரு சிறுவனைப் போல‌ கையை கூப்பிக் கொண்டு "ஓம் நமோ நாராயனாய நமஹ" என்றார்.
நான் அவரிடம் சொன்னேன் "ஐயா இந்த மந்திரத்தை 18 முறை தன் குருவிடம் சென்று அறிந்துக் கொண்ட இராமானுஜர், சமூக நலமே முக்கியம் என்பதற்காக, தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, அனைவரும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று இதை அனைவருக்கும் உபதேசித்தார். அதே சமூக அக்கறையை உங்களிடமும் காண்கிறேன். நீங்களும் ஒரு இராமானுஜர்தான்" என்றேன். பெரியவர் நெகிழ்வோடு சிரித்துவிட்டு, வேறொரு மேஜையை துடைக்கச் சென்றார்.
---------------------------------------------------------------------------------------------------------

பாம்பு கடித்தால் உடனே செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கு என்பது யாருக்காவது தெரியுமா ?
சமீப காலமாக பாம்பு கடிபட்ட ஏழைகள் தனியார் மருத்துவ மனைக்கு வருவது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தனியார் மருத்துவ மனைகளில் போதிய அளவு ஆன்டிவெனம் எனப்படும் விஷமுறிவு மருந்துகள் கையிருப்பு இருப்பதும் இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் விஷமுறிவு மருந்துகளை பேசன்டிடமே வாங்கி தர சொல்லுவதும் (அதன் விலை 15000) அதன் பிறகு 30000 - 40000 வரை பில் போடுவதும் பெரும்பாலான ஏழைகளை மேலும்கடனாளியாக ஆக்கிவிடுகிறது.
ஆனால் பாம்பு கடிக்கு தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைவிட உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.
கோவை அரசு மருத்துவமனையில்அனைத்து விதமான ஆன்ட்டிவெனம் மருந்துகளும் எப்போதும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் பாம்பு கடி பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் அழைக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். தங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை ஒப்படைக்கும் போக்குதான் பரவலாக காணபடுகிறது.
பாம்பு கடி பேசன்ட்டுகள் முதலுதவிக்கு பின் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அரசே ஒரு உத்தரவு போட்டாலும் பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.
வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT)
அமைப்பாளர் திரு சாதிக் அலி கூறும்போது "பாம்பு கடிக்கும் இடங்களில் பணக்காரர்கள் வசிப்பது குறைவு என்பதால் பெரும்பாலும் பாம்பு கடி வாங்குபவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள், சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாமல் அல்லாடும் போக்கே நிலவுகிறது. அப்படியான சிகிச்சை பெற எங்கள் டிரஸ்ட் உதவுகிறது. அவர்கள் எந்த நேரமும் எங்களை தொடர்பு கொண்டு (தொடர்பு எண் சரவனன் 9787257999)
உதவி பெறலாம்" என்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை கிடைக்கிறது என்பதை நாம் எல்லோரும் பிரபல படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள்.
இனிமேல் யாரையாவது பாம்பு கடித்தால் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வையுங்கள் நண்பர்களே !!!

--------------------------------------------------------------------
'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' என்ற படத்தை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஆழமான அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
அரசன் இறந்துவிட, அவனது பால்ய மகன் புலிகேசியை சிறு வயது முதலே கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தி, உண்மையான அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் இளவரசனின் மாமன். கொஞ்சம் பெரியவனானவுடன், அந்தப்புரத்தில் காலத்தை ஓட்டி, மதி மயங்கி கிடக்க வைத்திருப்பான்.
இதே தந்திரத்தை, இந்திய அளவில் (ஏன்.. உலக அளவில்) கார்ப்பரேட்கள் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.
குழந்தைகளுக்கு கார்ட்டூன்
இளைஞர்களுக்கு காதல் படங்கள்.
கல்யாணமானவர்களுக்கு பணத்தாசை
வீட்டு பெண்களுக்கு சீரியல்.
இவை அனைத்தும் திட்டமிட்டே பெரிய அளவில் அரங்கேற்றப்படுகிறது. சமுதாயத்தை கேளிக்கையில் ஈடுபடுத்தி அவர்களை அடிமைப்படுத்துவது தலையாய நோக்கம்.
இப்படி கேளிக்கைகளில் மூழ்கியிருக்கும் ஒரு சமுதாயம் தங்கள் உரிமைகளுக்காக போராடும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பது கூட தெரியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மீடியா என்ன சொல்கிறதோ, அதை உண்மை என்று நம்பும் கூட்டங்களாக நாம் மாறிவிட்டோம்.
நம் ஒவ்வொருவரின் தேவைகள் அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகிறது. நமது விருப்பு வெறுப்புகள் அனைத்தும் ஊடகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு Seduced நிலையில்தான் இருக்கிறோம்.
இதிலிருந்து மீட்டெடுக்கும் உக்கிரபுத்திரன் யார் என்பதுதான் தெரியவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------



No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog